Monday, March 27, 2017

விவசாயிகளால் என்ன பண்ண முடியும்?

நமது உறவுகள் ஆடையின்றி, மானத்தை இழந்து அங்கே தலைநகரில் நடு ரோட்டில் போராடிக்கொண்டிருக்கிறது. மான தமிழச்சி தன் உயிரின் மேலாக கருதும் தன் மானத்தையே விட்டு அங்கே பிச்சை கேட்கிறாள். தமிழ்நாடு அரசாங்கமும் தன் உட்கட்சி பிரச்சனையை விட்டு வருடமாகியும் வெளியே வரமுடியவில்லை. இதில் மற்ற பிரச்சனைகளை எங்கே பார்ப்பது.  கண்டுகொள்ள ஆளில்லை, எடுத்து சொல்ல தேசிய பத்திரிக்கைகள் தயாராக இல்லை. ஏன் தமிழ் நாளிதள்களே பெரியதாக கண்டுகொள்ளவில்லை. இதுவும் ஒரு செய்தி, அவ்ளோதான்.


Sunday, June 23, 2013

கூகிள் கடவுளா? சாத்தானா?

உங்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமோ இல்லையோ, இவ்வுலகத்தில் உங்களைப் பற்றி அனைத்தும் தெரிந்த ஒருவர் இருக்கிறார். யாருக்கும் தெரியாமல் நீங்கள் செய்த பல விசயங்களை ஆதாரத்துடன் வைத்திருப்பவர் இவர். என்றோ செய்த ஒரு விசயத்தை தேதி, நேரம் முதல் உங்களுக்கு கொடுக்கும் வல்லமை படைத்தவர். உங்களுடையது மட்டுமல்ல, உலகின் கோடானகோடி மக்களின் குடுமியை இறுக்கி கையில் பிடித்து இருக்கும் அவர் யார்? கடவுள் என நீங்கள் நினைத்தால், அந்த கடவுளின் பெயர் கூகிள்.

நீங்கள் கூகிள் பயனாளராக இருந்தால் நான் சொல்வதை எல்லாம் உங்களால் நன்றாகவே தொடர்பு படுத்தி பார்க்க முடியும். உங்களுக்குத்தான் பாதிப்பு அதிகம்.

Friday, April 12, 2013

மலைவேம்பு: ஓர் கண்ணோட்டம்

எங்கள் மலை வேம்பு தோட்டம்
மலைவேம்பு (Melia Dubia) மரங்கள் பயிரிடுவது சமீப காலங்களில் ஈரோடு, சேலம் மாவட்ட விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது. இம்மரங்கள் அதிக வருவாய் தருவதாகவும், முதலீடு குறைவு என்றும், பராமரிப்பு தேவையில்லை என்ற கருத்தும் பரவலாக உள்ளது. இதன் பின்னணி என்ன, இது எல்லாம் உண்மையா என்பதை என்னுடைய அனுபவத்தை வைத்து இங்கே தொகுத்துள்ளேன்.

6 வருடங்களுக்கு முன்பு தோட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமானதால் என்ன பயிரிடலாம் என ஆலோசனை கேட்க சென்னை சைதாபேட்டையில் உள்ள வன அதிகாரி அலுவலகத்திற்கு என் உறவினர் குமாரவேல் ஐயாவை சந்திக்க சென்றிருந்தேன். அவர் தான் எனக்கு இம்மரத்தை பற்றியும் இதன் எதிர்காலம் பற்றியும் கூறினார். அவர்,நீ போய் இதையே பயிரிடு, அப்பாவிடம் நான் பேசுகிறேன் என்று சொல்லி அனுப்பினார். பின்னர் இம்மரத்தை  விவசாயிகளிடம் பிரபலமடைய வைத்த பெருமை குமாரவேல் ஐயாவையே சேரும். அவர் என்னுடைய உறவினர் என்பதால்,  முதன் முதலில் மலை வேம்பை பயிரிட்ட மிக சொற்ப விவசாயிகளில் நாங்களும் ஒருவராக இருக்க முடிந்தது.

ஆரம்ப கட்டங்களில் விதையில் இருந்து செடி உருவாக்கும் முறை மிகவும் கடினமான வேலை. ஏனென்றால் மலைவேம்பின் கொட்டை மிக மிக கடினமான வெளிப்புறத்தை கொண்டது. சுத்தியால் உடைத்தால் தான் உடையும். ஆனால் அப்படி உடைக்கும் பொழுது  உள்ளே இருக்கும் பருப்பு தூளாகி விடும். பின்னர் குமாரவேல் ஐயா அவர்கள் குளோனிங் மற்றும் திசு வளர்ப்பு முறையில் கன்றுகள் உற்பத்தி செய்ய முயன்று வெற்றியும் கண்டார். மலை  வேம்பு மரம், நாட்டு வேம்பு போல் இல்லாமல் நேராக மிக உயரமாக வளரக்கூடியவை. இதன் வளர்ச்சி மூங்கில், தேக்கு போன்ற மரங்களை ஒப்பிடும்போது மிக வேகமாக இருக்கிறது.  ஒட்டு முறையில் உருவாக்கப்படும் இம்மரங்கள் ஆரம்ப கட்டங்களில் செடியை காப்பாற்றும் அளவுக்கு தண்ணீர் இருந்தால் போதுமானது. பின் அதிக நீர் இல்லாமல், வறட்சியை தாங்கும் தன்மை படைத்தவை. அதனால்தான் விவசாயிகளிடையே வேகமாக பரவியது என்று கூட சொல்லலாம்.

மூன்று அடி சதுரம், மூன்றடி ஆழத்தில் குழி எடுத்து... மண்புழு உரம் (2 கிலோ), வேம் (50 கிராம்), அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனாஸ் ஆகியவற்றில் தலா 20 கிராம் இவற்றை மண்ணோடு கலந்து இரண்டு அடி ஆழத்துக்குக் குழியை நிரப்பி, மையத்தில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நடவு செய்யும் முறையில் பல கருத்துக்கள் உள்ளன. நாங்கள் நடவு செய்யும் பொழுது ஒவ்வொரு செடிக்கும் 10 அடி இடைவெளி விட்டோம். அப்படி வைக்கும் பொழுது ஒரு ஏக்கருக்கு சராசரியாக 350 மரங்கள் தேவைப்படுகிறது. ஆனால் பின்னர் மக்கள் அதிக மரம் நடவு செய்ய ஆசைப்பட்டு இடைவெளியை குறைத்து குறைத்து 5 அடி வரை கூட குறைத்தனர். ஆனால் எங்களுடைய அனுபத்தில் 10 அடி இருந்தால் தான் நல்லது என்பேன். ஏனென்றால், மரம் உயர்ந்து வளரும் பொழுது, மேல் சென்று படர்கிறது. அப்படி விரிந்து படரும் பொழுது, நல்ல இடைவெளி கண்டிப்பாக தேவைப்படுகிறது. குறைந்த இடைவெளியில் வளரும் வேகத்திற்கும் அதிக இடைவெளியில் வளருவதர்க்கும் நல்ல வித்தியாசம் காண முடிந்தது.

ஆரம்ப  கட்டங்களில் சொட்டு நீர் மூலமாகவோ, நீர் பாய்ச்சலின் மூலமாகவோ செடியை பராமரிப்பது நல்லது. நம் மக்களிடையே உள்ள கெட்ட பழக்கங்களில் ஒன்று, இது போன்ற மரங்கள் நடவு செய்தால், பராமரிப்பு தேவை இல்லை என்று எண்ணி கண்டுகொள்ளாமலே விட்டுவிடுவது. அதனால் மரங்கள் பராமரிப்பின்றி வளரும் நிலைக்கு தள்ளப்படுகிறது. பராமரிப்பு தேவை இல்லாமலும் இம்மரம் வளரும், சரிதான். ஆனால், சிறு பராமரிப்பு இருக்கும் பட்சத்தில் மரங்கள் நன்றாகவும், செழிப்பாகவும் வளரும். அது விரைவில் அறுவடை செய்யவும், நல்ல மகசூல் பார்க்கவும் உதவும். ஒரு விவசாயி மஞ்சள் சாகுபடிக்கும், நெல் சாகுபடிக்கும் செய்யும் பராமரிப்பை ஒப்பிடும்போது, இது ஒன்றுமே இல்லை எனலாம். ஆனால், எதுவுமே செய்ய தேவை இல்லை என்று அர்த்தம் இல்லை.

மரம் 100 சென்டிமீட்டர் சுற்றளவையும், கிளை இல்லாமல் குறைந்தது 5 மீட்டர் உயரத்தையும் நெருங்கினால் அறுவடை செய்யலாம். இன்றைய தினத்தில் இப்படி இருக்கும் ஒரு மரம் ரூ.6000 முதல் ரூ. 8000 வரை மதிப்பிடப்படுகிறது. இம்மரம் 5 அல்லது 6 வருடங்களில் இருந்தே அறுவடை செய்யலாம் என கூறப்படுகிறது. ஆனால் என் அனுபவத்தில் தொடர்ந்து நீர் பாய்ச்சல் இருந்தால் தான் இக்குறுகிய காலத்தில் அறுவடைக்கு தயார் ஆகிறது. இல்லையேல், 8 - 10 வருடங்கள் கூட காத்திருக்க நேரிடும். இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு ஏக்கருக்கு 350 மரங்களுக்கு, ரூ 25 லட்சம் மகசூல் பார்க்கலாம். ஒரு வேலை மரம் தேவையான அளவு வளரும் முன்பே விற்க வேண்டும் என்றால், மொத்த மரமும் விறகுக்கு டன் கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அப்படி எடுக்கும் பட்சத்தில் ஏக்கருக்கு 1 - 2 லட்சம் கூட தேராது. அதனால் மரம் வளரும் காலம் வரை கண்டிப்பாக காத்திருக்கும் நிலைமை ஏற்படும்.

பிளைவுட், தீக்குச்சி, காகிதம், கனரக வாகனங்கள் கட்டமைக்கவும் இம்மரம் பயன்படுகிறது. இம்மரம் எடை குறைவாகவும், கடினம் அதிகமாகவும் இருக்கும். இதனால் பல இடங்களில் இம்மரத்திற்கு கடும் தேவை ஏற்பட்டுள்ளது. பிளைவுட்கம்பெனிகள் அறுவடைக்கு தயார் என்றால் அவர்களே வந்து மரங்களை வெட்டி எடுத்து செல்கிறார்கள். இம்மரங்களை கனரக வாகனங்களின் உபயோகிக்கும் பொழுது, வண்டியின் எடை வழக்கமானதை விட மிக குறைந்து காணப்படுகிறது. இதனால் நெடு தூரம் செல்லும் வாகனங்களில் ஆயிரக்கணக்கில் எரிபொருள் செலவு மிச்சப்படுத்தப்படுகிறது.

பலர்  என்னிடம் கேட்ட ஒரு கேள்வி "மரத்தை வெட்டி எடுத்த பிறகு நிலம் வீணாகி விடாதா?" என்பதுதான். மரங்கள் வெட்டிய பின்பு மிச்சம் இருக்கும் வேர் பகுதிய எடுத்துக்கொள்ள நிறைய விறகு கடைகள் உள்ளன. அவர்களே இயந்திரங்கள் வைத்து எடுத்துக்கொண்டு, டன்னுக்கு ஏற்றவாறு பணமும் தருகிறார்கள். அந்த வருமானத்தை வைத்து தோண்டிய வேர் குழியை மூட உபயோக படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் பூமியை சரி செய்ய எதுவும் கையில் இருந்து செலவு செய்ய தேவையில்லை.

மலைவேம்பு நாற்று தேவை எனில் அருகில் அரசு வனத்துறை அலுவலகங்களை நாடலாம். அல்லது நிறைய தனியார் நர்சரிகளிலும் கிடைகிறது. ஒரு நாற்று ரூ 30 வரை கூட விற்கப்படுகிறது. சில சமயம் நாட்டு வேம்பு செடியும் இத்துடன் கலந்து விடுகிறது. வளரும் பொழுதுதான் நாட்டு வேம்பை கண்டறிய முடியும். அதனால் தெரிந்த இடங்களில், நம்பிக்கையானவர் மூலம் வாங்குவது நன்று. திருநெல்வேலியில் ஜெய்சங்கர் என்பவர் உற்பத்தி செய்து தமிழ்நாடு முழுவதும் கொடுக்கிறார்.சத்தியமங்கலம் கடம்பூர் பகுதிகளிலும் கிடைகிறது.

Wednesday, April 10, 2013

கச்சத்தீவும்... நம் மீனவனின் பாடும் - பாகம் 2

சரியாக 3 வருடத்திற்கு முன்பு நான் இந்திய மீனவர் பிரச்சனையின் மூல காரணத்தை எழுதியிருந்தேன் (அப்பதிவை படிக்க). முடிவில்லா அப்பிரச்சனை இன்றைய தேதியில் மிகவும் அதிகரித்துள்ளது. அதை மேலும்

அண்டை நாட்டு ராணுவம் நம் மக்களை தாக்குவது ஒரு தொடர் செயலாக இருக்கும்பொழுது, ஏன் நம் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது? சாவது மீனவன் தானே என்ற நினைப்போ? இல்லை, இவர்களுக்காக நாம் ஏன் அண்டை நாட்டுடன் பிரச்சனை செய்ய வேண்டும் என்ற எண்ணமா? ஏன் இந்த பிரச்சனையை மட்டும் மத்திய அரசு கண்டுகொள்ளவே மறுக்கிறது. ஏன் தமிழக அரசு இதற்காக போராடவில்லை? ஏன் இதெல்லாம் செய்தியுடனே முடிந்து விடுகிறது? இப்படி பல கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன. எதற்கும் பதில் இல்லை. யூகித்து எழுதும் விஷயமும் இல்லை இது.
அலச தோன்றிய பொழுதுதான் பகுதி 2 உருவானது. மீனவர்கள் ஏன் சுடப் படுகிறார்கள்? இதற்க்கு என்ன தான் முடிவு? ஏன் இந்திய அரசு மௌனம் காக்கிறது?

இலங்கை இனப் படுகொலை பிரச்சனை என்று தமிழக மக்களிடையே மீண்டும் புத்துயிர் பெற்றதோ, அன்றே இந்திய மீனவர்கள் இலங்கை கப்பற்படையால் தாக்க படும் சம்பவம் அதிகரிக்க தொடங்கியது. நம்மின் ஒவ்வொரு நாள் போராட்டத்திற்கும் சில உயிர்களை நாம் கடலில் பணயம் வைக்கிறோம்.

தினம் தினம் கடலுக்குள் செல்லும் அப்பா வருவாரா என்று தரையில் ஏங்கி நிற்கும் குழந்தைக்கும், திரும்பி வரும் வரை வைத்த கண் வாங்காமல் கடலை பார்த்து காத்திருக்கும் மீனவன் குடும்பத்துக்கும் நம் அரசாங்கம் இதுவரை செவி சாய்க்கவில்லை. இனியும் எதுவும் செய்வது போல் தெரியவில்லை.  என்ன பதில் வைத்து இருக்கிறோம் மக்களுக்கு ?

ஏன் இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண மறுக்கிறோம்? தமிழக மீனவர்கள் தாக்க பட்டார்களே தவிர, இந்திய மீனவர்கள் இல்லை. அப்படித்தான் செய்திகள் பிரதிபளிகின்றன.  அதுவா நம் பார்க்க வேண்டிய  முதல் பிரச்சனை? இல்லை, இவர்களும் மனிதர்கள்தான் என்று உணர்த்துவதா? கண்டிப்பாக  இரு நாடுகளும் பேச்சு வார்த்தையை துவக்கினால் தான், முடிவு என்பது கிட்டும். அதற்கான அறிகுறியும் தெரியவில்லை.

முதலில்  அரசு சார்பாக, மீனவர்களின் குறையை கேட்கவும், அவர்களின் கோரிக்கையை அறியவும் நிபுணர் குழு அமைக்கலாம். அவர்களால் கண்டிப்பாக ஒரு சில முடிவுகளை முன்வைக்க முடியும்.

இரு நாட்டுக்கும் இடையில் இருக்கும் ஒப்பந்தங்கள் தெளிவின்மையால், இரு நாட்டு அரசும் அதை முதலில் தெளிவு படுத்தவேண்டும். மேலும் இருநாடுகளும் சேர்ந்து ஒரு பொது ரோந்து படையை உருவாக்கி,  பிரச்சனைக்குரிய இடங்களை இவர்களிடம் ஒப்படைக்கலாம். இதனால் சுடுதல், கைது செய்வது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். எல்லை மீறும் மீனவர்களை அங்கேயே திருப்பி அனுப்பலாம்.

கடல் வழி மக்கள் நாடு கடப்பதையும், கடத்தல் தொழிலை ஒழிக்கவும் கடுமையான தண்டனையை விதிக்கலாம்.அது எல்லை மீறும் மீனவர்களுக்கு ஒரு பயத்தை கண்டிப்பாக உண்டாக்கும். மேலும், இன்றைய தேதியில், தொழில்நுட்பத்தை கொஞ்சம் நம்பலாம். அதாவது கடலுக்கு செல்லும் ஒவ்வொரு படகிலும் GPS போன்ற கருவிகள் பொருத்தி, கண்காணிக்கலாம். இது இரு நாடுகளுக்குமே உதவும். இதன் உதவியுடன், விதிகளை மீறும் படகை கைப்பற்றுவதுடன், மீனவரின் மீதும் நடவடிக்கை எடுக்கலாம்.

இன்றெல்லாம் மீனவர்கள் சுடப்பட்ட செய்திகள் வந்தாலே, இது கேட்டு கேட்டு பழகிப்போன செய்தி தான் என்று மனது செய்தியை கேட்க கூட மறுக்கிறது. ஆனால், தன் வயிற்று பிழைப்பிற்கு தினம்தினம் உயிரை பணையம் வைக்கும் சாதாரண மனிதனின் நிலையில் இருந்து பார்க்கும்பொழுது, என்ன சொல்வதென்று புரியவில்லை.

இது எல்லாம் நம்மை போன்ற தினசரி செய்தி படிக்கும் பாமரனின் எண்ணங்கள். அரசு நினைத்தால், இதைவிட தெளிவான, உபயோகமான முடிவுகளை கண்டிப்பாக எடுக்க முடியும். தேவை கொஞ்சம் கடைக்கண் பார்வையும், கருணையும் தான்.

Monday, April 8, 2013

தமிழக காவல்துறைக்கு ஒரு பாராட்டு

மதிய நேரம்... வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அலைபேசி அழைத்தது.

"சார், நான் B7 காவல் நிலையத்தின் காவல் அதிகாரி பேசுறேன்" என்றார்.
சொல்லுங்க சார் என்றேன். "சார், உங்க மேலஒரு வழக்கு இருக்கு. உங்கள பார்க்க அபார்ட்மென்ட் வாசல இருக்கேன், கொஞ்சம் கீழே வந்து போக முடியுமா சார்" என்றார்.

காவல்துறை நம்மை நண்பன் என்று சொன்னாலும், நமக்கு உள்ளே எழும் பீதியை பல சமயம் விவரிக்க முடியாது. நாம என்னய்யா தப்பு செய்தோம் என்று எண்ணிக்கொண்டே நடக்க ஆரம்பித்தேன். அந்த ஒரு சில வினாடிகளில் மனதில் பல எண்ணங்கள் ஜெட் வேகத்தில் ஓட ஆரம்பித்தது.

என்னவா இருக்கும்? எதாவது என்றால் யாரை நாடுவது? நான் அப்படி ஒன்றும் தப்பு செய்யவில்லையே... கூடவே இதய துடிப்பும் எகிறிக்கொண்டிருன்தது.

பதட்டத்துடன் கீழே வந்தேன். 40களில் இருக்கும் அந்த நபர் சீருடையில் இல்லை ஆனால் காவல் துறையின் வழக்கமான ஹேர் ஸ்டைல், மீசை, பழுப்பு நிற காலணி. இருந்தாலும் இவர் காவலர் தானா? பார்த்த ஒரு சில வினாடிகளில், அவரை என் மனம் எடை போட்டுக்கொண்டிருந்தது. 

அருகில் சென்றேன். அவர் என்னிடம் வந்து "சாரி சார், சாப்பிடுற நேரத்துல உங்கள தொந்தரவு பண்ணிவிட்டேனா?. நான் B7 காவல் நிலையத்தில் இருந்து வருகிறேன்" என்று பணிவுடன் கூறி, அவருடைய அடையாள அட்டையை என்னிடம் கொடுத்து தான் காவலாளி என்பதை உறுதி படுத்திக்க சொன்னார். (ஒருவேளை  நான் இவர் காவலர் தானா என எண்ணியதை கண்டுபிடித்துவிட்டாரோ?). நான் பார்த்துவிட்டு, சொல்லுங்க சார்  என் மேல் என்ன புகார் என வினவினேன்.

சார்  நீங்க போக்குவரத்து விதிகளை மீறி இருக்குறீர்கள். அதற்கு நீங்க அபராதம் கட்டவேண்டும் என்றார்.

"நானா? எப்போ, என்ன பண்ணினேன்?"

என்  வண்டி எண்களை சொல்லி, இது உங்க கார் தானே? நீங்க 17ம் தேதி RSபுரம் பக்கம் போனீங்களா? என்றார்.

நான் செல்போனில் 17ம் தேதி என்ன நாள் என்று பார்த்துவிட்டு, ஆமாம் போனேன் என்றேன். அங்க ஒரு சிக்னலில் நிறுத்தல் கோட்டை தாண்டி வண்டியை நிறுத்தியதற்க்குத் தான் சார் அபராதம்" என்றார் பொறுமையாக.

வழக்கம் போல நான் கோயம்பத்தூர் குசும்பில் "போங்க சார், என்ன வச்சு காமடி பண்ணாதீங்க, நம்ம ஊர்ல யாரு சார் கோட்டுக்கு முன்னாடியே வண்டிய நிறுத்தி இருக்காங்க? அப்படி பார்த்தா நீங்க எல்லாருக்கும் அபராதம் போடணும். உங்களுக்கு கேஸ் இல்லேனா இதுமாதிரி எதாவது சொல்லாதீங்க" என்றேன்.

அவர்  கொஞ்சம் கூட கோபப்படாமல், "சார் தெரியலேனா தெரியலேனு சொல்லுங்க. எல்லாருக்கும் கொடுத்துகிட்டு தான் இருக்கோம். உங்களுக்கு இது முதல் முறையா இருக்கலாம். உங்களுக்கு நம்பிக்கை இல்லேனா, கமிஷனர் அலுவலகம் சென்று விவரம் கேளுங்க. நீங்க செய்த தவறை படத்தோடு தருவார்கள்" என்று பொறுமையாக சொன்னார்.

அவர் அப்படி அமைதியாக சொன்னது, நான் பேசிய விதத்தை தவறு என்று சொல்லாமல் சொல்லியது.

எவ்வளவு அபராதம் என்றேன். நூறு ரூபாய் என்றார். "என்ன சார், 100 ரூபாய்க்கா இவ்ளோ பண்ணுறீங்க? இன்றைய தேதிக்கு இதெல்லாம் யார் வேணாலும் கட்டலாமே சார்" என்றேன்.

"உண்மை தான் சார். தண்டனை உங்களுக்கு இல்லை, எங்களுக்குத்தான். நான் இப்படி ஒரு நாளைக்கு குறைந்தது 10 பேர் வீட்டுக்கு போகணும். பெட்ரோல் காசுக்கு கூட இது உதவாது. இதுல அடிக்கிற வெயில் வேற"

அப்புறம்  ஏன் சார்?

"இது நாங்க பண்ணுறதே மக்களிடம் ஒரு விழிப்புணர்ச்சியை உருவாக்கத்தான். அடுத்த முறை நீங்கசாலையில் செல்லும்போது கொஞ்சம் யோசிப்பீங்க. இதே மாதிரி எல்லோரும் நினைப்பது தொடர்ந்தால் கண்டிப்பாக மாற்றம் வரும். இது ஒரு ஆரம்பம் தான்" என்று நம்பிக்கையாக சொன்னார்.

அவர் சொன்னதில் உண்மை இருப்பதை என்னால் உணரமுடிந்தது. என்னுடைய அபராதத்தை செலுத்தினேன், உடனே அதற்க்கு ரசீதும் கொடுத்தார். இவரின் பொறுமையையும், காவல் துறையின் இந்த அமைதியான புரட்சியையும் வணங்குகிறேன். 

பின்குறிப்பு: என்ன ஒரே கவலை, இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சிக்னல் கோட்டுக்கு முன்பே வண்டி நிறுத்தி விடுகிறேன். ஆனால் பின்னாடி வருபவர்கள் எல்லாம் கத்தி, திட்டி தீர்த்து விடுகிறார்கள். சில சமயம் "அடேய், மடையா முன்னாடி போனா அபராதம்"னு சொல்லனும்னு ஆசை படுகிறேன். ஆனா அவங்க பாக்குறத பார்த்தால், என்னமோ நான் குற்றம் செஞ்ச மாதிரி பாக்குறாங்க. இந்த ரமணா படத்தில் வர மாதிரி குற்றம் செய்யாம இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுது. தமிழக காவல் துறைக்கு சொல்லணும்.

Monday, February 11, 2013

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க

என்னுடைய நெருங்கிய சகோதரி தவறியதால், அவரின் உடலை ஈரோடு மின் மயானத்தில் தகனம் செய்ய எடுத்து சென்றிந்தோம். உடலை தகனம் செய்யும் பொழுது, மெதுவான இசையிலும், அழுத்தமான குரலிலும் பின்னணியில் ஒரு பாடல் ஒலித்தது. கல் நெஞ்சையும் கரைய செய்யும் வைரமுத்து அவர்களின் பாடலை இங்கே தொகுத்துள்ளேன்.

பாடலை கேட்க இங்கே செல்லவும். : http://www.youtube.com/watch?v=wPbybg3LCtc


என் மனதை பிழிந்த அந்த பாடல் வரிகள்.
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!


ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை


பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே 


கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க


பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.


கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!


மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்


பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்


தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்


மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

Friday, December 28, 2012

ஊருக்குத்தான் உபதேசம்

விடுமுறையில் என் அக்கா மகள் வீட்டிற்கு வந்திருந்தாள். எதோ எழுத்து வேலை இருப்பதாக சொல்லி, 5 வெள்ளைத்தாள் வாங்கி வரச்சொன்னாள். நானும் கடைக்கு சென்று 5 வெள்ளைத்தாள் கேட்டேன். ஒரு மதிக்கத்தக்க பெரியவர் உள்ளே சென்று எடுத்து வந்தார். எவ்வளவு என்று கேட்டேன். 3 ரூபாய் என்றார். 10 ரூபாயை எடுத்து கொடுத்தேன். சில்லறை எடுத்துக்கொண்டிருந்தார்.

நான், ஐயா ஒரு தாள் விலை எவ்வளவு என்றேன். ஒரு சில வினாடிகள் யோசித்தவர் 50 பைசா என்றார். அப்போ, 5 தாள் விலை எப்படி 3 ரூபாய் ஆகும் என்றேன். உடனே அவர், 50 பைசா சில்லறை இல்லை, வேணும்னா மிட்டாய் எடுத்துகோங்க என்றார். மிட்டாய் எடுப்பதேல்லாம் இருக்கட்டும், அதை நீங்க முதலிலே சொல்லி இருக்க வேண்டும். சில்லறை இல்லேனா அதை சொல்லாமல் நீங்களே வைத்து கொள்வீர்களா என்றேன். கொஞ்சம் சூடான அந்த பெரியவர், ஒரு மிட்டாயை எடுத்து கொடுத்தார், சில்லறையுடன். நானோ, மிட்டாய் வேண்டாம், இன்னொரு வெள்ளை தாள் கொடுத்துவிடுங்கள் என்றேன். அவரோ காதில் விழும்படி "இந்த 50 பைசா எல்லாம் எங்க கிட்ட கரெக்டா கேளுங்க, கோடி கோடியா நாட்டுல கொள்ளை அடிக்குற எல்லாரையும் போய் கேக்காதீங்க" என முனகினார்.  நான் எதுவும் பேசாமல்இன்னொரு வெள்ளைத்தாளை வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன்.

இது கடையில் மட்டுமில்லை, பேருந்தில் போனாலும் நடக்கிறது. ஒரு ரூபாய், 2 ரூபாய் சில்லறை எல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள். டிக்கெட் கொடுத்துவிட்டு எதுவும் தெரியாதது போல் போவார்கள். மீறி கூப்பிட்டு கேட்டால்,  அப்புறம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்கள். நம் பக்கமே திரும்ப மாட்டார்கள். நிறைய முறை நான் சண்டை போட்டு வாங்கியதுண்டு. பிச்சை எடுப்பதற்கும் இவர்கள் செய்யும் செயலுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. சில்லறை இல்லை என்று  சொல்லும் நடத்துனரை, அவர் பொய்யே சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடிகிறது. எதுவும் சொல்லாமல் செல்லும்பொழுது உண்மையாகவே அவரிடம் சில்லறை இல்லையென்றாலும் அவர் திருடுவதாகவே தோன்றுகிறது.


நாம ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் அடிக்க பார்க்கிறோம். கொஞ்சம் மேலே இருப்பவன் ஆயிரத்தில் ஏமாற்ற பார்க்கிறான். இன்னும் கொஞ்சம் மேலே போனா லட்சம், இன்னும் மேலே போனா கோடி. வசதிக்கும் தகுதிக்கும் ஏற்றது போல் ஒவ்வொருவரும் ஏமாற்ற பார்க்கிறோம். ஆனால் குறை கூறுவது மட்டும் கண்ணில் தெரியும் பெரும் கொள்ளையர்களை. நமக்கும் வாய்ப்பு கிடைத்தால் இன்னும் அதிகமாக திருட மாட்டோம் என்பதிற்கு என்ன உத்திரவாதம்? நாம் திருந்தாமல் நாடு திருந்தும் என்றால் எப்படி நடக்கும்.